Sunday, April 26, 2009

சிற்பக் கலையில் ஒரு புதிய முயற்சி

அலுமினிய சிற்பம்

கோடு புள்ளிகளால் ஆனது. ஒவ்வொரு புள்ளியும் இப்பேரியக்க பிரபஞ்சத்தின் குறியீடுகளே. ஓவியம், மொழியுரு, சிற்பக்கலை எல்லாம் ஒரு ஆழ்ந்த நோக்கில் பல புள்ளிகளின் தொகுப்பே. கணிதம் விஞ்ஞானம் போன்ற வரையறைசூத்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தகவல், புள்ளிகளால் இணைக்கப் பெறுகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையே மிகத் துல்லியமான ஒரு இடைவெளி, இடைவெளியற்ற காட்சியாய் பரிணாமம் கொள்ளும். அது வரி வடிவம், எழுத்துரு, கோடு, வளைவுகளாய், ஓவியமாய், சிற்பமாய் பதிவு செய்கிறது.

கலை:

எல்லா கலைகளுமே மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினால் சிருஸ்டிக்கப்படுவதே. அந்த சக்தி நூறு சதவீதம் நேர்மையுடன், நூறு சதவீதம் முழுமையாய் யாரொருவர் பயன்படுத்துகிறாரோ அப்பொழுது அவருடன் இணைந்து தன்னியக்கமாய் இயங்கும். அப்பொழுது
ஒரு கவிதை
ஒரு ஓவியம்
ஒரு நடனம்
ஒரு சிற்பம்
ஒரு இசை
ஆக எல்லாவிதமான கலைகளும் அவரவர் மூலம் தன்னிச்சையாய் தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளும் அந்த அப்பாற்பட்ட சக்தி. கடவுள் நம்பிக்கை உடையோருக்கு அதுவே இறை சக்தி. ஆன்மீக நம்பிக்கை அற்ற யாருக்கும் அதுதான் பிரபஞ்ச சக்தி, இயற்கை சக்தி.

எல்லா கலை படைப்புகளின் மூலாதாரமே இந்த இறை சக்தி தான். பேரியக்க பிரபஞ்ச சக்தி மட்டுமே.

வெளிப்படும் தன்மை, ரூபங்களில் வேறு வேறு தளங்களில் இயங்கும் இந்த சக்தி ஓன்று மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. யாரும் எப்பொழுதும் எவ்விதத்திலும் உரிமையோ, உடைமையோ கொள்ள இயலாதது. சாதி, மத, இனம், சமய சடங்குகளுக்குள் இதை இழுத்துக் கட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரை கலை வேறு வேறு தளங்களில், வேறு வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் இந்த இறை சக்தியே அதன் வேர். அசைக்க முடியாத இந்த உண்மையை எல்லாக் கலைஞர்களும் நிச்சயம் உணருவார்கள்.

அலுமினிய சிற்பம்.

அலுமினிய தகட்டில் செதுக்குவதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்லில், மரத்தில் செதுக்கும் சிலைகள் பஞ்சலோகத்தில் வர்க்கும் சிலைகள், மண்ணில் உருவாக்கும் சிலைகள் என பலவகை சிற்பங்கள் உண்டு. அலுமினிய தகட்டில் செதுக்கும் செயலால் இதுவும் சிற்ப வகையில் ஓன்று என்றே கருதுகிறேன்.

முழுக்க முழுக்க இறை சக்தியின் தொடர்போடு தான் இந்த அலுமினிய சிற்பம்வடிவமைக்கப்படுகிறது.

தெய்வீக உருவங்கள் மட்டும் அல்ல. குருமார்கள், சித்தர்கள், மகரிஷிகள், அழகுசார்ந்த அனைத்து ஓவியங்களையும் செதுக்கும் போது நான் உணரும் ஒரு பரவசநிலை சாதரண சமயங்களில் இருப்பதில்லை என்பதை நன்கு அறிவேன். என்னுடன் சம்பந்தப்பட்ட இக்கலை மீது ஆர்வமுள்ள சிலரும் இதனை அறிவார்கள்.

Monday, April 13, 2009

அலுமினிய சிற்பம்

அலுமினிய தட்டில் மிளிரும் தெய்வீக வடிவம்.

சிற்பம் : ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள். கல், மரத்தில் செதுக்கப்படுவதன் மூலம் சிற்பமாகிறது. வேறு பொருட்களில் செய்யும்போது ஒட்டுதல், உருக்கி வரத்தால், அச்சுகளில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்து சூளையில் சுடுதல் போன்ற பலவிதமான செயல்முறைகள் கையாளப்படும்.

"நமது சிற்பங்கள் அயல் நாட்டுச் சிற்பங்களைப் போன்று வெறும் அழகிய கட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துகளையும், உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றன." (மயிலை.சீனி வேங்கடசாமி (தமிழர் நாகரீகமும் பண்பாடும் - .தட்சிணாமூர்த்தி.)

"நம் நாட்டு சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஓன்று, ஆடல் கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்" - வை.கணபதி.


சிற்பக்கலை நம் பாரத நாட்டின் பழம் பெரும் கலை. கல்லில்
, மரத்தில் இந்த சிற்பங்களை நாம் பார்த்
திருப்போம். ஆனால் நான் அலுமினிய தட்டில், தகட்டில் கடந்த 1990 முதல் இந்த சிற்பக்கலையினை செய்து வருகிறேன்.

சிற்பங்கள் செதுக்குவதையும் சிற்பங்களில் வெளிப்படும் தமிழரின்அழகியலையும், மரபையும், நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் செதுக்கப்பட்டன.

சிற்பக்கலையில் பலவகைகள் இருக்கிறது. நான் அலுமினிய தட்டில் செதுக்கிக் கொண்டிருப்பது இறைவனது விருப்பம் என்றே சொல்வேன்.

ஆம். இது சிற்பக்கலையில் ஒரு புதிய முயற்சிதான். இது பற்றியவிபரங்களை இப்போது அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளவிரும்புகிறேன். ஏனெனில், இந்தக்கலையினை நான் கற்றுக் கொண்டது ஒரு டி.வி. நிகழ்ச்சியை பார்த்து தான்.

கனவுகளை விதைப்போம்
கற்பனைகளுடன் காரியங்களை செய்வோம்.
காலம் மாறும்.
கனவுகள் முளைக்கும்.
ஆலமரமென விழுதுகள் தாங்க
காலத்திலும் அழியா
கலைகள் வளரும்.

பாரம்பரியம் மிக்க நம் பாரத நாட்டின் பழங்கலைகளில் கல், மரம்முதலியவற்றில் செதுக்கும் சிலைகள்,சிற்பங்கள் வகையில் இதுஅலுமினிய தட்டில் செதுக்கப்படும் ஓவியங்கள். செதுக்கோவியம் என்றும்கூறலாம்.

எந்த உலோகத்தில் செதுக்கினாலும் அது சிற்பம் என்ற இலக்கணப்படி, இதற்கு அலுமின சிற்பம் என பெயர் வைத்துள்ளேன்.

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. நம்மில் சிலர் அந்தந்த திறமைகளைக் கண்டு உணர்ந்து, தன்வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இந்த மனித சமுதாயத்துடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

கலை வடிவங்கள் யாவும் காலத்தால் பதிவு செய்யப்படுகிறது. கலைஞனின் உடல் அழிகிறது. அவன் படைத்த கலையில் அவனுடைய ஆன்மா பதிகிறது.

காலகாலத்துக்கும் வாழும் நம் பெருமைமிக்க எல்லாச் சிற்பங்களும் இதற்கு சாட்சி அல்லவா?

Graver என்னும் செதுக்குபோரை கொண்டு செதுக்கப்படும் இந்தக்கலை மேன்மேலும் வளரவேண்டும் என்பதே என் ஆவல். இந்தக் கலையில் ஈடுபட்டிருக்கும் எல்லா கலைஞர்களையும் ஓன்று சேர்க்க வேண்டும், அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்.

இந்த படைப்புக்கள் ஆத்மார்த்தமானவை.
இந்த சிற்பங்களை செதுக்கும்போது, ஒருவிதமான தியான நிலையில்தான் செய்கிறேன். நான் என்று குறிப்பிடும்போது அதை இறைசக்தி என்றே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

என் கையில் செதுக்குபோரை (Graver) ஒரு கருவி.
இறைசக்தியின் கையில் நான் ஒரு கருவி.
இதுதான் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட இக்கலையின் மூலம் உணர்ந்தது.

செதுக்கும்போது தெய்வீக மந்திரங்களை சொல்லிக் கொண்டுதான் செதுக்குகிறேன். அதனால் ஒருவிதமான பரவசநிலை என்னிலும், செதுக்கும் அறையிலும் நிலவுவதை நன்றாகவே நம் உணர முடியும்.

நான் செதுக்கியுள்ள சில தெய்வீக சிற்பங்களின் புகைப்படங்களை இங்கு தந்துள்ளேன்.